அதிகாலையில் வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சென்னை: தரமணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விடியற்காலை குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த போது, ஒரு நபர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனே, அந்த பெண் சத்தம் போடவே, வீட்டிலிருந்த நபர்கள் சத்தம் கேட்டு ஓடிவருவதை கண்டு அந்த நபர் ஓடவே வீட்டிலிருந்த பெண்ணின் கணவர் உட்பட அருகில் வசிக்கும் நபர்கள் தப்பியோடிய நபரை துரத்திச் சென்று பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் ராயப்பேட்டை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும், கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர் சென்னையில் தங்கி வேலை செய்து வருவதும்  தெரியவந்தது. மேலும் விடியற்காலை, கோட்டூர்புரம் பகுதியில் சென்ற போது, கதவு தாழ்ப்பாள் போடாமல் திறந்திருந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், கோட்டூர்புரம் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: