தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வீசும் கிழக்கு திசை காற்றால் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில், மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக நாளை மறுநாள் அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும், திடீரென்று 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசலாம். இதேபோல் டிச.5ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், திடீரென்று 65 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசலாம் என்பதால் இங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிச.5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, டிச.8ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நெருங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: