பூ வியாபார தகராறில் ஒருவருக்கு வெட்டு, வாலிபர்களுக்கு 5 ஆண்டு சிறை; சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரியை வெட்டிய வாலிபர்களுக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருவான்மியூரை சேர்ந்தவர் சுப்புரா (53). இவரது மனைவி சற்குணவதி. இருவரும் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கும் இவர்கள் கடைக்கு அருகே பூ வியாபாரம் செய்து வந்த சாந்தி மற்றும் அவரது மகள் லட்சுமிக்கும் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017 ஜூலை 6ம் தேதி சாந்தியின் உறவினரான ஆட்டோ டிரைவர் முரளி (23), குட்டைமேடு பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (22) ஆகியோர் சற்குணத்தின் வீட்டுக்கு சென்று சுப்புராவை கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சுப்புரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.முருகானந்தம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் முரளி, யுவராஜ் ஆகிய இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: