பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா தமிழகம் முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 சிறப்பு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி, அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலை த.வேலு, மாதவரம் சுதர்சனம், இளைய அருணா, சிற்றரசு உள்ளிட்ட அனைத்து மாவட்ட திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாள் தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவரது சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டி, பேராசிரியர் அன்பழகன் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கி-நூலுரிமைத் தொகையையும் பேராசிரியரின் குடும்பத்தாருக்கு வழங்கி பேராசிரியரின் திராவிட இயக்க தொண்டிற்கும்-அப்பழுக்கற்ற பொது வாழ்விற்கும் புகழ் சேர்த்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், “7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” நேற்று முன்தினம் (30.11.2022) அறிவித்தார்.

அவரது நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையில் இந்த வருடம், வருகிற 19ம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை செயல்படும் டிபிஐ வளாகத்தில் பேராசிரியரின் உருவச் சிலை நிறுவி, அந்த வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்று அழைக்கப்படும் எனவும், கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாடெங்கும் முழங்கட்டும் திராவிடக் கொள்கை முரசம். நூறாண்டுகளை கடந்து வீறுநடைபோடும் திராவிட இயக்கத்தில், முக்கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலான பங்களிப்பை வழங்கியவர் கலைஞர். அவருக்கு அண்ணனாக-தோழனாகத் துணை நின்ற பேராசிரியர் அன்பழகனுக்கு முக்கால் நூற்றாண்டுக்கு மேலான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர்.

திமுகவிற்கு சோதனைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்ட காலங்களில், கொள்கையுணர்வு சிறிதும் குன்றாமல், இயக்கத்தைக் காக்கும் பெரும் பொறுப்பை சுமந்திருந்த கலைஞருக்கு உற்ற துணையாக நின்று, தோள் கொடுத்துக் காத்தவர் பேராசிரியர் அன்பழகன்.தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டில் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அவரது பெருமைமிகு பொதுவாழ்வுக்கு புகழ் மாலை சூட்டியிருக்கிறது திமுக. “முதலில் நான் மனிதன், இரண்டாவது நான் அன்பழகன், மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன், நான்காவது நான் அண்ணாவின் தம்பி, ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் என் உயிர் உள்ளவரை என்னோடு இருக்கும்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து, கொள்கையுணர்வு மறையாமல் நம் நெஞ்சில் நிலைத்து, நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 15ம் தேதி (வியாழக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் 100 பொதுக்கூட்டங்கள் நடத்த தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படும். அந்த கூட்டங்களை மாவட்ட செயலாளர்கள் சிறப்புடன் நடத்திட கூட்டம் தீர்மானிக்கிறது.

அதேபோல், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் டிசம்பர்-17 (சனிக்கிழமை) பேராசிரியர் அன்பழகனின் பொது வாழ்வைப் போற்றிடும் கவியரங்கம் நடைபெறும். டிசம்பர்-18 (ஞாயிற்றுக்கிழமை) வடசென்னையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறும். பேராசிரியரின் பிறந்த நாளான வருகிற 19ம் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளை கழகங்களின் சார்பிலும், துணை அமைப்புகளான அணிகள் சார்பிலும் பேராசிரியரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்திடவும் கூட்டம் தீர்மானிக்கிறது. தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களில் மட்டுமின்றி கழக அமைப்புகள் உள்ள மாநிலங்கள் அனைத்திலும், திமுக உணர்வாளர்கள் உள்ள இடங்கள் தோறும், இல்லங்கள்தோறும் பேராசிரியரின் புகழ் ஒளி பரவிடச் செய்வோம். அந்த நன்னாளில் நாடெங்கும் முழங்கட்டும் திராவிடக் கொள்கை முரசம் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தள்ளாத வயதிலும், தளராத தத்துவச் சிந்தனைகளுடன் கடைசி மூச்சு வரை கழகத்திற்காகவே வாழ்ந்த பேராசிரியர்.

Related Stories: