நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஐந்தாவது மாதமாக மாற்றமில்லை: குஜராத் தேர்தலுக்கு பின் உயரும்?

சேலம்: சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையும், சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் ஏற்பட்டபோது, காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது.

இதனால், நாடு முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை சராசரியாக ரூ1,100 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தினர். அப்போது, சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹1,068.50 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன்பின், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் என அடுத்தடுத்த மாதங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரே நிலையாக எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வைத்துக்கொண்டது.

இச்சூழலில் நடப்பு மாதத்திற்கான (டிசம்பர்) புதிய விலை பட்டியல் இன்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதில், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் தொடர்ந்து 5வது மாதமாக மாற்றம் செய்யப்படவில்லை. இதனால், சென்னையில் ரூ1,068.50 ஆக நீடிக்கிறது. ஆனால், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை நடப்பு மாதத்திற்கு ரூ1.50 குறைத்துள்ளனர். இதனால் சென்னையில் ரூ1,893ல் இருந்து ரூ1.50 குறைக்கப்பட்டு ரூ₹1,891.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு மாதம் சிலிண்டர் விலை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடப்பதால், விலையை அதிகரிக் காமல் அதேவிலையில் நீடிக்கச் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்ததும், நடப்பு மாதத்திலேயே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது.

Related Stories: