ஆலந்தூரில் உள்ள இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாழை, மந்தாரை இலை: மண்டல சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்

ஆலந்தூர்: ஆலந்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, வாழை, மந்தார இலைகளை பயன்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டல எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லைசன்ஸ் பெற்ற 97 இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வது குறித்து சுகாதார துறை அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டம் பழவந்தாங்கலில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், ஆலந்தூர் மண்டல சுகாதார நல அலுவலர் சுதா, கால்நடை மருத்துவர் அகல்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இறைச்சி கடைக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கினர். அப்போது, இறைச்சி கடைகள் சுத்தமாகவும் துர்நாற்றம் வீசாமலும் இருக்க வேண்டும். கழிவுகளை சேகரிக்க வரும் குப்பை சேகரிப்பாளர்களிடம் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இறைச்சியை மந்தார இலை, வாழை இலையில் கட்டி கொடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது.

ஆடு, மாடுகளை கடைகளில் வெட்டக் கூடாது, அதற்கான மாநகராட்சி இறைச்சி கூடங்களில் வெட்டி, சான்றிதழ் பெற்ற பிறகே இறைச்சிகளை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும், இறைச்சி கடைகளில் ஈக்களை அகற்றும் மிஷின், பேன் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும், தொடர்ந்து சுகாதாரத்துறையின விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், கடைபிடிக்காத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றனர். கூட்டத்தில் குப்பை அகற்றும் நிறுவன பகுதி மேலாளர் நாராயணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட இறைச்சி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: