பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது: 2.25 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.25 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே ஒரு கும்பல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தாம்பரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் ஷாலினி மற்றும் சப்இன்ஸ்பெக்டர் தினேஷ் தலைமையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை பல்லாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரியை சேர்ந்த கோலப்பள்ளி, சோம்பல் சின்னி (24) மற்றும் விழுப்புரம் மாவட்டம், வானூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 2.25 கிலோ கஞ்சா இருந்தது.

இருவரும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, சிறு சிறு பொட்டலங்களில் அடைத்து பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகள் மற்றும் 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: