ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா விவகாரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அமைச்சர் ரகுபதி இன்று சந்திக்கிறார்: மசோதா தொடர்பான சந்தேகங்களுக்கு நேரில் விளக்கம் அளிப்பார்

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை சட்ட அமைச்சர் ரகுபதி இன்று நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார். அப்போது, கவர்னர் கேட்கும் சந்தேகங்களுக்கு அமைச்சர் நேரில் விளக்கம் அளிப்பார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துள்ளனர். இந்த தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.

அந்த குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் சட்ட மசோதா குறித்து, கடந்த 24ம் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிற சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து, கடந்த 25ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆனாலும், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், அரசியல் அமைப்பு சட்டம் 213வது பிரிவின்படி, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின் பேரவை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதி ஆகிவிடும். அதன்படி 6 வாரங்கள் ஆனதால் அவசர சட்டம் கடந்த 27ம் தேதியுடன் காலாவதியானது. இதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வலியுறுத்த, சட்ட அமைச்சர் ரகுபதி கடந்த 25ம் தேதி நேரம் கேட்டிருந்தார். அமைச்சருக்கு நேரம் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து பேசி விட்டு வந்தனர். இதுபற்றி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறும்போது, ‘தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை பார்க்க கவர்னர் அனுமதி அளிக்கிறார். அதேநேரம், மக்கள் பிரச்னைக்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற சட்ட மசோதாவுக்கு குறித்து விளக்கம் அளிக்க அமைச்சர் ஒருவர் சந்திக்க நேரம் கேட்டால் கவர்னர் கொடுக்காமல் காலம் கடத்துகிறார்’ என்று விமர்சனம் எழுந்தது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியை இன்று (1ம் தேதி) காலை 11 மணிக்கு நேரில் சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெறும். கவர்னர் ஆர்.என்.ரவியை, அமைச்சர் ரகுபதி இன்று சந்திக்கும்போது, தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக கொண்டு வந்துள்ள சட்ட மசோதா குறித்தும், அதில் கவர்னருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்தும் நேரில் விளக்கம் அளிப்பார்.

ஏற்கனவே தமிழக அரசு இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தாலும், இன்று நேரில் விளக்கம் அளிக்கப்படும். அமைச்சருடன், சட்ட வல்லுநர்களும் உடன் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, அரசு நிறைவேற்றியுள்ள சட்ட மசோதா குறித்த தனது சந்தேகங்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் கேட்டறிவார். இதைத்தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை தொடர்பான சட்ட மசோதாவுக்கு கவர்னர் விரைவில் அனுமதி அளிப்பார் என்று கூறப்படுகிறது.

Related Stories: