போலி இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி; சென்னை, திருவள்ளூர் வாலிபர்கள் உள்பட 4 பேர் கைது

சென்னை: போலியாக இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தி கடன் கொடுப்பதாக மோசடியில் ஈடுபட்ட சென்னை வாலிபர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 72 செல்போன்கள், 89 சிம்கார்டுகளை கைப்பற்றினர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த உதயமூர்த்தி, இலக்கியதாசன் மற்றும் திருவாரூர் காட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகிய மூவருக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு தொலைபேசி மூலம் வந்த தகவலில், குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாகவும், மேலும் ரூ.5 லட்சம் கடன் பெறுவதற்கு 10 சதவீத தொகையாக ரூ.50 ஆயிரம் முன்பணமாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மூவரும் தலா ரூ.50ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் கடன் கிடைக்காத நிலையில் செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மூவரும் திருவாரூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை நெசப்பாக்கம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த வாசு மகன் கோபிகிருஷ்ணன் (32) என்பவர், அந்த பகுதியில் பிரபல நிறுவனம் பெயரில் இன்சூரன்ஸ் நிறுவனம் போலியாக நடத்தி வந்ததும், கால் சென்டர் என்ற பெயரில் பணியாட்களை பணிக்கு அமர்த்தி இதுபோன்று கடன் கொடுப்பதாக பெண் பணியாளர்களை பேச வைத்து ஏமாற்றியதும், இவருக்கு உடந்தையாக திருவாரூர் அலிவலம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஸ்டாலின் (32), திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் நடராஜன் (22) மற்றும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுரேஷ் (34) ஆகிய மூவரும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் நேற்றுமுன்தினம் சென்னை நெசப்பாக்கம் பகுதியில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.99 ஆயிரத்து 854 ரொக்கம், கம்ப்யூட்டர், லேப்டாப், 72 செல்போன்கள், 40 சார்ஜர்கள், 89 சிம் கார்டுகள் மற்றும் வங்கி காசோலைகள் பறிமுதல் செய்தனர். இதில் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன், 4 பேரையும் போலீசார் திருவாரூர் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Related Stories: