கிராமங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் தடையின்றி கிடைக்க ரூ.605 கோடியிலான திட்டப்பணிகளுக்கு டிச.9-ல் டெண்டர்: சபாநாயகர் அப்பாவு தகவல்

திசையன்விளை: கிராமப்புறங்களுக்கு தாமிரபரணி தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக ரூ.605 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு டிச.9ல் டெண்டர் விடப்படவுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே குமாரபுரம் ஊராட்சிக்குட்பட்ட தரகன்காடு, மிக்கேல்நகர், தெற்கு புலிமான்குளம், பெருங்கண்ணன்குளம், பிரகாசபுரம் ஆகிய ஊர்களில் பகுதி நேர ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

விழாவிற்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர்.ஜெகதீஸ் தலைமை வகித்தார். ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, கிளை செயலாளர் பால்சன்  முன்னிலை வகித்தனர். குமாரபுரம் ஊராட்சி தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்றார்.விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, ‘புதிதாக ரேசன் கடை உருவாக்க வேண்டும் என்றால் 150 முதல் 200 ரேசன் கார்டுகள் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 40 குடும்ப அட்டைக்காக இந்த கடை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தற்போது ராதாபுரம் தொகுதியில் மட்டும் 23 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 17 கடைகள் உருவாக்கப்பட உள்ளது. இந்த கடைக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். தாமிரபரணி தண்ணீர் சீராக கிடைக்க ரூ.605 கோடி நிதி பெற்று வந்துள்ளேன். இதற்காக டிசம்பர் 9ம் தேதி டெண்டர் விடப்பட உள்ளது. இதன்மூலம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படும். அதே போன்று திசையன்விளை, பணகுடி, வள்ளியூர் உட்பட பேரூராட்சி பகுதிக்கு ரூ.271 கோடியில் தனி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு பணி விரைவில் முடிவடையும்.

இதன்மூலம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி இருந்தது போல் செழிப்படையும். இதற்கு முன்னோட்டமாக 1,200 கனஅடி தண்ணீர் விரைவில் கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் சென்று பார்த்த ஸ்மார்ட் கிளாஸ் தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 88 அரசு ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 205 அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் கிளாஸ் வீதம் ஆரம்பித்து வைக்கப்படும். இதன் மூலம் தரமான கல்வி கிராமப்புற மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் வழங்கப்படும்’ என்றார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கார்த்திக், குமாரபுரம் ஊராட்சி துணை தலைவர் ஆனிஷா பயாஸ், வார்டு உறுப்பினர்கள் ராஜதுரை, அன்னலிங்கம், சின்னபாண்டி, ஊராட்சி செயலாளர் இசக்கியப்பன், ஒன்றிய கவுன்சிலர் ஜெசி பொன்கலன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் நாகமணி, அமெச்சூர், வர்த்தக பிரிவு துணை அமைப்பாளர் சமூகை முரளி, திசையன்விளை நகர இளைஞரணி செயலாளர் நெல்சன், பேரூராட்சி கவுன்சிலர்கள் கமலாநேரு, கண்ணன், உதயா, சரவணகுமார், சுவிஸ் சாலமோன், சுவாமிதாஸ், பொன்இசக்கி, தமிழ்ராஜா, செல்லத்துரை, எழில், காமேல், டென்னிஸ், மாடக்கண் ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: