தீபத்திருநாள் நெருங்குவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி: குறைந்த அளவில் கிடைக்கும் களிமண்; உற்பத்தி சரிவு

காங்கயம்: தீபத்திருநாள் நெருங்கிவருவதை முன்னிட்டு காங்கேயம் அருகே அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது, குறைந்த அளவில் களிமண் கிடைப்பதால் உற்பத்தி குறைந்ததாக தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.

கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அகல் விளக்குகள் தான். அன்றைய தினம் வீடுகள் தோறும் விதவிதமான அகல் விளக்குகள் கண்ணைக் கவரும் வகையில் வரிசை கட்டியிருக்கும். வரும் டிசம்பர் 6ம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருநாள் வரும் நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த அகல்விளக்குகள் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டத் தொழிலாளர்கள் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. காங்கேயம் பகுதியில் சம்பந்தம் பாளையத்தில் பாரம்பரியமாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்தினர் கடந்த 2மாதமாக அகல்விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வண்டல்மண், செம்மண் மற்றும் காற்றுமண் என்று சொல்லப்படும் மணல் கலந்த மண் சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து பின்னர் சக்கர உருளையில் வைத்து நேர்த்தியாக பல்வேறு விதமான அகல்விளக்குகளை வார்தெடுக்கின்றனர். இவ்வாறு தயாரான அகல்விளக்குகளை சூளையில் வைத்து சுட்டு பக்குவப்பத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 25ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமங்கள்தோறும் மண்பாண்டத் தொழிலாளர்கள் இருந்தபோது மண்பாண்டங்கள் மற்றும் அகல்விளக்குகள் பண்டமாற்று முறையில் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது மண்பாண்டங்களுக்கு பதில் பித்தளை, அலுமினியம், எவர்சில்வர் பாத்திரங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்ததால் அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான குடும்பத்தினர் வேறு தொழில்களை நாடிச் சென்று விட்டனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருவதால் பண்டமாற்று முறைபோய் ரொக்கத்திற்கு அகல்விளக்குகளை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் மழைக்காலங்களில் அகல் விளக்குகள் தயாரிப்பு குறைவாக உள்ளது போதிய களிமண் இல்லாத சூழலும் இயற்கை ஒத்துழைக்காத காரணத்தாலும்  தீபம் தயாரிப்பு பணிகள் மந்தமான நிலையில் உள்ளது இருப்பினும் மக்கள் தேவைக்கேற்ப காங்கயம் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தீபங்கள் தயாரித்து அனுப்பப்பட்டு வருகிறது.சிறிய தீபங்கள் ரூ.1முதல் ரூ.3 வரையிலும், பெரிய தீபங்கள் ரூ.5 முதல் ரூ.8 வரையிலும், ஐந்து முக தீபங்கள் ரூ.15 வரையிலும், குத்துவிளக்கு போன்ற தீப வகைகள் ரூ.20க்கும் விற்கப்படுகிறது. இதுபற்றி சம்பந்தம்பாளையத்தைச் சேர்ந்த மண்பாண்ட கைவனை கலைஞர் சிவக்குமார் கூறும்போது: நாங்கள் 5 தலைமுறையாக மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

நாளொன்றுக்கு ஆயிரம் அகல்விளக்குகள் வரை தயாரித்து வருகிறோம். இதில் சாதாரண விளக்கு, பஞ்சமுக அகல்விளக்குகள், கோயில்களில் ஏற்றப்படும் பெரிய அளவிலான விளக்குகள் என பல்வேறு வகையிலான விளக்குகளை தயாரித்து வருகிறோம். நாங்கள் தயாரிக்கும் விளக்குகளை காங்கயம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த சீசனில் மட்டும் 3 லட்சம் விளக்குகளுக்கு மேல் சப்ளை செய்வோம். ஆனால் களிமண் போதிய அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் மண் கொண்டு வருவதற்கு பல கெடுபிடிகள் உள்ளது. அடையாள அட்டையை காண்பித்தால் எங்கிருந்து வேண்டுமானலும் களிமண் கொண்டுவரலாம் என அரசு அனுமதிக்க வேண்டும். இந்த ஆண்டு குறைந்த அளவில் மண் கிடைத்ததால், உற்பத்தியும் குறைந்தது. இதனால் 1.5 லட்சம் அகல் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்துள்ளது. பாரம்பரியமாக தொன்று தொட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறோம் மக்கள் அனைவரும் களிமண்ணால் கையால் செய்த தீபங்களை வாங்கி பயன்படுத்தினால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெற அவர்களின் வாழ்வாதாரம் உயர வசதியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: