திருப்போரூர் சிதம்பர சுவாமி மட குளத்தில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி

சென்னை: திருப்போரூரில் கந்தசுவாமி கோயிலை கட்டிய சிதம்பர சுவாமிகளின் மடம் உள்ளது. இந்த மடத்தை ஒட்டி குளம் ஒன்றும் உள்ளது. இதை அந்த பகுதியில் வசிப்பவர்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது, குளத்தின் படிக்கட்டுகளில் 3 பேரின் உடைகள், 3 செல்போன்கள், கல்லூரி அடையாள அட்டைகள், ஒரு மோட்டார் சைக்கிள் சாவி ஆகியவை கிடந்தன. இதை பார்த்த அந்த பெண் குளத்தின் மற்றொரு பகுதியில் குளித்துக் கொண்டிருந்த வாலிபர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த வாலிபர்கள் திருப்போரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் லில்லி, எஸ்.ஐ. ராஜா ஆகியோர் போலீசாருடன் சிதம்பர சுவாமிகள் மடத்து குளத்திற்கு சென்று விசாரித்தனர். பிறகு, சிறுசேரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அலுவலர் யுவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து குளத்தில் கயிறு கட்டி இறங்கி தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே மாணவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்தனர்.

அதில், குளத்தின் படிக்கட்டுகளில் கிடந்த 2 கல்லூரி அடையாள அட்டையை வைத்து, 2 பேரை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். இதில், கேளம்பாக்கம் ஊராட்சி சாத்தங்குப்பம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ரவி என்பவரின் மகன் முகேஷ் (18), ராஜி என்பவரின் மகன் உதயகுமார் (19), முனியன் என்பவரின் மகன் விஜய் (19) ஆகியோர் என்பதும், சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் முகேஷ் பி.காம். படித்து வருவதும், உதயகுமார் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருவதும், விஜய் கல்லூரியில் இருந்து ஒரு வருடம் படித்து விட்டு நின்றிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு வந்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாலை 6.30 மணியளவில் 3 பேரின் சடலங்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் 3 பேரும் சபரிமலைக்கு மாலை போட்டு இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Related Stories: