குளத்தில் சடலமாக மிதந்தான் குமரியில் சிறுவன் மர்ம மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது?

*கேரள அரசு கோரிக்கை எதிரொலி

நாகர்கோவில் : பூதப்பாண்டி அருகே சிறுவன் மர்மமாக இறந்த வழக்கு விசாரணை, சிபிசிஐடிக்கு மாற உள்ளதாக கூறப்படுகிறது.கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நிஜிபூ. இவரது மகன் ஆதில் முகமது (12). 7ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மே மாதம் குமரி மாவட்டம் திட்டுவிளையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்திருந்த ஆதில் முகமது, மே 6ம்தேதி காணாமல் போனான்.

பின்னர் இரு நாட்கள் கழித்து, மே 8ம்தேதி திட்டுவிளை அடுத்த மணத்திட்டை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டான். பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் ஆதில் முகமதுவை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு மாணவன் அழைத்து சென்ற காட்சிகள் இருந்தன. இதன் அடிப்படையில் மாணவனிடம் விசாரித்தனர். ஆனால் மாணவனிடம் இருந்து எந்த தகவலையும் பெற முடியாமல் வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வருக்கு, ஆதில் முகமது தந்தை வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்று கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், ஆதில் முகமது மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஆதில் முகமது மரணம் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி. அஸ்ராகர்க் மேற்பார்வையில் மீண்டும் விசாரணை தொடங்கியது.

பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்தது. ஆதில் முகமதுவை அழைத்து சென்ற சிறுவனிடம் தொடர்ந்து விசாரித்தனர்.

சம்பவம் நடந்த குளத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். காணாமல் போன அன்று ஆதில் முகமது டீ ஷர்ட் அணிந்திருந்தான். சடலமாக மீட்கப்படும் போது டீ ஷர்ட் இல்லை. எனவே ஆதில் முகமது அணிந்திருந்த டீ ஷர்ட்டை கண்டுபிடிப்பது முக்கியமானதாக கருதப்பட்டது. இதற்காக குளத்தில் கடந்த மாதம், தண்ணீரை வெளியேற்றும் பணியும் நடந்தது. ஆனால் டீ ஷர்ட் கிடைக்க வில்லை. சந்தேகிக்கப்படும் சிறுவனும் தொடர்ந்து மவுனமாக உள்ளான். இதனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள அரசு சார்பில், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

வழக்கின் உண்மை தன்மையை கண்டறிய சிபிசிஐடி விசாரணையே உகந்ததாக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடிக்கு மாற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 6 மாதங்கள் ஆகியும் சிறுவனின் மரணத்தில் நீடிக்கும், மர்மம் காவல்துறைக்கே பெரும் சவாலாக மாறி உள்ளது.

Related Stories: