சமூக நீதிக்கான மாநிலத்தில் சனாதனத்திற்கு இடமில்லை அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 2வது இடம் பிடிக்க பாஜ முயற்சி: திருமாவளவன் பேட்டி

கோபி: அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 2ம் இடத்தை பிடிக்க பாஜ முயற்சி செய்கிறது, சமூக நீதிக்கான மாநிலத்தில் சனாதனத்திற்கு இடமில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே கள்ளிப்பட்டிக்கு நேற்று வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அங்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் பாஜ வளர்கிறது அல்லது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பக்கூடிய ஒரு செயல் திட்டமாக இருக்கிறது. அவர்கள் அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2வது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பகிரங்க முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஊடக அரசியலை அவர்கள் உயர்த்தி பிடிக்கிறார்கள்.

அதாவது பாஜ இங்கு வலுவாக உள்ளது போன்ற தோற்றத்தை காட்டுகிறார்கள். இது வெறும் தோற்றம்தான். தமிழ்நாடு என்பது சமூக நீதிக்கான மாநிலம். சனாதனத்திற்கு இடமில்லை. பாஜவினர் அப்பாவி இந்துக்களை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் பாஜ உள்ளிட்ட சங்பரிவாரின் சனாதான அரசியலை அம்பலப்படுத்துவோம். திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்து சமயத்துக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்கள்.

இதை எல்லாம் அவர்கள் தமிழக அரசியலில் 2வது இடத்தை பிடிப்பதற்கான அரசியல் யுக்திகள். இந்த யுக்தி இங்கு எடுபடாது.  தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி இல்லை. அது கடந்த தேர்தலுடன் கலைந்து விட்டது. சிதறிவிட்டது. ஆனால் இங்கே கடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து வலுவோடு இருக்கிற அணிதான் திமுக தலைமையிலான கூட்டணி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: