சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் பெண் விஏஓ: வீடியோ, ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

மதுரை: மதுரையில் விதவை சான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய விஏஓவின் ஆடியோ, வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரை சிவகங்கை ரோட்டில் மேலமடை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு யாகப்பா நகரை சேர்ந்த பஞ்சவர்ணம், விதவை பென்ஷன் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விதவை சான்றிதழ் வாங்குவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

கடந்த ஒரு மாதமாக சான்றிதழ் வழங்காததால், தன்னார்வலர் ஒருவரின் உதவியுடன் பெண் விஏஓவான ரமணியிடம் சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது, சான்றிதழ் தருவதற்கு லஞ்சமாக ரூ.1,000 கேட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, முதல் தவணையாக ரூ.350ஐ, விஏஓ ரமணியிடம் கொடுத்தார். தலையாரி மலையாண்டியிடம் ரூ.250ஐ கொடுத்து விட்டு செல்லுங்கள். விதவை சான்றிதழ் அடுத்த வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார். லஞ்சம் கொடுத்ததை தன்னார்வலர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதவிர, ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. விஏஓவை போனில் தொடர்பு கொள்ளும் தன்னார்வலரிடம், ‘‘தலையாரி மூன்று மாடி வீடு கட்டி உள்ளார். அவரும் தான் லஞ்சம் வாங்குகிறார். இந்த சின்ன விஷயத்தைப் போயி பெருசாக்காதே’’ என்கிறார். இந்த வீடியோ, ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: