இயந்திர சாகுபடியில் களமிறங்கும் நெல்லை சுற்றுவட்டார விவசாயிகள் உருளை விதைப்பான் மூலம் நெல் விதைப்பு பணி தீவிரம்

நெல்லை: கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திர சாகுபடியில் நெல்லை விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர். உருட்டு விதைப்பான் கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களும் வடகிழக்கு பருவமழைக் காலமாகும்.

வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் இந்த மாவட்டங்களில் நல்ல மழை கிடைக்கும். அக்டோபர் மாதம் பிசான நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகள், நவம்பர் மாதத்தில் நாற்று நட்டு நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபடுவர். சமீபகாலமாக விவசாயத்தில் கூலியாட்கள் தேவை அதிகரித்து வருவதோடு அவர்களுக்கான சம்பள செலவும் அதிகரித்து இருக்கிறது. அதேவேளை, அவர்களின் செயல் திறன் குறைந்து கொண்டே வருகிறது.

 

வளர்ந்து வரும் மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய சூழலில், நெல் சாகுபடியை முழுமையாக இயந்திரமயமாக்குவது அவசியமான ஒன்றாகும். செம்மை நெல் சாகுபடி முறை பிரபலமாகி வரும் இச்சூழலில் ஏற்கனவே தமிழக நெல் வயல்களில் ஒன்றுபட்ட கூட்டு அறுவடை இயந்திரங்கள் ஆயிரக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எனவே அறுவடை மிக எளிதாகவும் விரைவாகவும் முடிந்து விடுகிறது. அதேபோல் நெல் நாற்று நடுவதற்கும் பல்வேறு நெல் நாற்று நடும் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பரவலாக உபயோகத்தில் உள்ளன.

லேசர் ஒளிக்கற்றை மூலம் நிலத்தை சமப்படுத்தும் கருவி, லேசர் மூலம் சேற்றுழவு சமன் செய்யும் இயந்திரம், நெல் தட்டு நாற்றங்கால் தயாரிக்கும் இயந்திரம், பின்னால் நடந்து செல்லும் வகை நடவு இயந்திரம், மேல் அமர்ந்து இயக்கிச் செல்லும் வகை நடவு இயந்திரம், கூம்பு வடிவ களை எடுக்கும் கருவி, விசைக் களையெடுப்பான், அறுவடை செய்து கட்டு கட்டும் இயந்திரம், ஒருங்கிணைந்த நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் சிப்பம் கட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த வரிசையில் நெல்லையில் நன்செய் நிலங்களில் நேரடி நெல் விதைக்கும் கருவி பயன்படுத்தப்படுகிறது. நெல் நாற்று நடுவதற்கு பதிலாக முளை கட்டிய நெல் விதைகளை சேற்று வயல்களில் நேரடியாக விதைக்கும் இந்த கருவி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியில் 4 உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப்பெட்டிகளில் 15 செ.மீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன.

இக்கருவியை ஒருவர் இழுத்துச் செல்ல கைப்பிடி ஒன்றும் உள்ளது. இக்கருவியைக் கொண்டு நாள் ஒன்றுக்கு ஒரு எக்டேர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யலாம். நாற்று நடவு தவிர்க்கப்படுவதால் ஆட்கள் கூலி பெருமளவில் குறைகிறது. இக்கருவியின் விலை சுமார் ரூ.5 ஆயிரம் ஆகும். இதன் சிறப்பம்சமாக சீரான விதை விதைப்பு மற்றும் பயிர் எண்ணிக்கை, விதையளவு குறைப்பு மற்றும் பயிர் அடர்த்தி குறைத்தலால் செலவு குறைதல், குத்துக்களில் விதைகள் சரியாகப் போடப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடி முடிந்து பிசான சாகுபடிக்கான பணிகள், மும்முரமடைந்துள்ளன. கார்த்திகை, தை மாதத்தில் வடகிழக்கு பருவமழை விவசாயத்தை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் விவசாயிகள் நாற்று பாவி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தை மேல்பாசனம், கீழ் பாசனம் என்று பிரிக்கின்றனர் விவசாயிகள். கார் பருவம் மேல்பாசன விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது. அதேவேளையில் பிசான பருவத்தில் கீழ் பாசன விவசாயிகள் நெல் நடுவையில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து பாளை. அருகே உள்ள திருவேங்கடம் பொட்டல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் கூறுகையில், ‘‘பணியாளர்கள் மூலம் ஒரு ஏக்கர் நடுவை பணிக்கு தற்போது ரூ.3500 முதல் ரூ.5 ஆயிரம் வரை தேவைப்படுகிறது. அதுவே நேரடி நெல் விதைக்கும் கருவியான உருட்டு இயந்திரத்தின் மூலம் நெல் விதைத்தால் ரூ.1200 வரையே செலவாகிறது. இதனால் பெரிய விவசாயி முதல் சிறிய விவசாயிகள் வரை அனைவரும் தற்போது நெல் நடுவைக்கு நேரடி நெல் விதைக்கும் கருவியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த முறையில் நெல் நடுவையால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 30 மூட்டைகள் முதல் கூடுதலாக விளைச்சல் கிடைக்கிறது. இதன்மூலம் பணமும், நேரமும் மிச்சமாகிறது’’ என்றார்.

*களை எடுப்பது எளிது

வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘உருளை விதைப்பான் கருவியை பயன்படுத்தி வயல்களில் நெல் விதைக்கும்போது ஒழுங்கு வரிசை அதிகம் காணப்படும். ஒரு உருளைக்கு ஒரு கிலோ வீதம் 4 உருளைகளிலும் 4 கிலோ இட்டு விதைக்க முடியும். ஒரு ஏக்கரில் விவசாயிகள் நெல் விதைகளை கையால் வீசி விதைத்தால் 20 கிலோ செலவாகும். ஆனால் உருளை விதைப்பான் பயன்படுத்தும்போது 10 கிலோ நெல் விதைகள் போதுமானது. திருந்திய நெல் சாகுபடியில் கயிறு கட்டி நெல் விதைகளை விதைப்பர். உருளை விதைப்பான் மூலம் விதைக்கும்போது முக்கால் இடைவெளிக்கு ஒரு நாற்று என்பது எளிதாக அமையும். இதனால் நெல் வயலில் களையெடுப்பது எளிதாகும். உரங்களை எளிதில் விவசாயிகள் தூற்றி செல்லலாம். விவசாயிகளுக்கு மகசூலும் அதிகம் கிடைக்கும்’’ என்றனர்.

Related Stories: