பணியில் இல்லாத 3 வாக்குச்சாவடி அலுவலர்கள் டிஸ்மிஸ்: 10 பேர் சஸ்பெண்ட்

ஆம்பூர்:  திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று தேர்தல் சிறப்பு சுருக்க திருத்தம் 2023 தொடர்பாக சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடந்தது. இதில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அமர்குஷ்வாஹா திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது பல்வேறு வாக்குசாவடிகளில் பணியில் இருக்க வேண்டிய வாக்குச்சாவடி  நிலைஅலுவலர்கள் பணியில் இல்லாதது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து வாணியம்பாடி நகராட்சியில் அனிமேட்டராக பணிபுரிந்து வந்த கலைவாணி என்பவரும், ஆம்பூர் தொகுதியில் பணியில் இல்லாத சுவாதிலட்சுமி, கவிதா, பத்மாவதி, மாதனூர் கிராம உதவியாளர் வசந்தி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வாணியம்பாடி  வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மேற்கண்ட 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதேபோல் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்களான புள்ளானேரி எஸ்.கீதா, ஏலகிரி விமலா, திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி குனிச்சி மோட்டூர் ராணி, திருப்பத்தூர் டவுன் சத்துணவு அமைப்பாளர் சிவானந்தம், வசந்தி ஆகியோரை கலெக்டர் திருப்பத்தூர் அமர்குஷ்வாஹா செய்த பரிந்துரையின்பேரில் ஆர்டிஓ லட்சுமி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதுதவிர ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அங்கன்வாடி பணியாளர் பூரிகமாணிமிட்டா தீபா, திருப்பத்தூர் தொகுதியில் சத்துணவு அமைப்பாளர்களான சேவியர் புஷ்பராஜ், ஆரோக்கியதாஸ் ஆகியோரை கலெக்டர் அமர்குஷ்வாஹா பரிந்துரையின்பேரில் நிரந்தர பணிநீக்கம் செய்து திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: