ராகுலின் நடைபயணம் தொடர்பாக போலி வீடியோவை பரப்பும் பாஜக: காங். தலைவர்கள் கண்டனம்..!

புதுடெல்லி: ராகுல்காந்தி நடைபயணத்தின் போது பாகிஸ்தானை வாழ்த்தி கோஷம் எழுப்புவது போல், பாஜக வெளியிட்ட வீடியோ போலியானது என்று காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் நடைபயணம் தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டார். சுமார் 21 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மத்தியபிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் நடந்து வருகிறார்கள். வீடியோ முடிவடையும் நேரத்தில், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் கேட்கிறது.

இந்தப் பதிவில் அமித் மாளவியா, ‘காங்கிரஸ் எம்பி ஒருவர், இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிறகு திடீரென நீக்கி விட்டார். இதுதான் காங்கிரசின் உண்மை முகம்’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘காங்கிரஸ் நடைபயணம் வெற்றி பெற்றுள்ளதை பொறுக்காமல், பாஜக மலிவான பிரசாரத்தை மேற்கொள்கிது. போலி வீடியோவை, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது.

அந்த வீடியோவை பாஜக நீக்க வேண்டும். இல்லாவிட்டால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற மலிவான வீடியோ மூலம் நாங்களும் பதிலடி கொடுப்போம்’ என்றார். மேலும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா நேட் கூறுகையில், ‘காங்கிரசின் நடைபயணம் உங்களை மனரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காக வருந்துகிறோம். நீங்கள் பதிவிட்ட போலி வீடியோவை நீக்குங்கள்’ என்று கூறினார்.

Related Stories: