ஷாரோன் கொலை வழக்கு தமிழ்நாட்டுக்கு மாற்றம் இல்லை-கேரளாவிலேயே தொடர்ந்து நடத்த முடிவு

திருவனந்தபுரம் : கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவர் ஷாரோன்  கொலை செய்யப்பட்ட வழக்கை கேரளாவிலேயே தொடர்ந்து விசாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம்,  பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஷாரோன் (23). இவரும் குமரி மாவட்டம், களியக்காவிளை  அருகே ராம வர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா(23) என்பவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25ம் தேதி மரணமடைந்தார்.

ஷாரோனுக்கு அவரது காதலி கிரீஷ்மா  ஜூசில் விஷம் கலந்து கொடுத்தது தான் மரணத்துக்கு காரணம் என்று  ஷாரோனின் தந்தை ஜெயராஜ் பாறசாலை போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் வழக்கு  குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

திருவனந்தபுரம் மாவட்ட  குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் ஷாரோன், கஷாயத்தில்  விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  தனக்கு ஒரு ராணுவ  வீரருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதாகவும், இதனால் ஷாரோனை தவிர்ப்பதற்காகவே அவருக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்ததாகவும் கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்தார். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோரும் கிரீஷ்மாவுடன் கைது  செய்யப்பட்டனர்.

இவர்களை குற்றப்பிரிவு  போலீசார் காவலில் எடுத்து நடத்திய விசாரணையில், கிரீஷ்மா ராமவர்மன்சிறையில் உள்ள  தன்னுடைய வீட்டில் வைத்துத் கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து  கொடுத்ததும், அதற்கு முன்பும் பல முறை ஜூஸ்  சேலஞ்ச் என்ற பெயரில் ஜூசில் வலி நிவாரணி மாத்திரைகளை கலந்து  கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதற்கிடையே பெரும்பாலான குற்ற  சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் நடந்திருப்பதால் வழக்கு  குமரி மாவட்ட போலீசுக்கு மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக  கேரள குற்றப்பிரிவு  போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழகத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று சட்ட ஆலோசனை கிடைத்தால் உடனடியாக தமிழகத்திற்கு மாற்றப்படும் என்று கேரள  டிஜிபி அனில்காந்த் தெரிவித்தார். இதனால் வழக்கு தமிழ்நாட்டுக்கு  மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கை  தமிழ்நாட்டுக்கு மாற்றத் தேவையில்லை என்று கேரள அட்வகேட் ஜெனரல்  திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார். இதனால்  ஷாரோன் கொலை வழக்கை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரே தொடர்ந்து  விசாரிப்பார்கள் என தெரிகிறது.

விரைவில் குற்றப்பத்திரிகை

கைது செய்யப்பட்ட கிரீஷ்மா, சிந்து மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு  ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்காக 90 நாட்களுக்குள்ளேயே குற்றப்பத்திரிகையை  தாக்கல் செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: