கடந்த 2 நாட்களாக மீண்டும் விளம்பரங்கள் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு கவர்னர் அனுமதி தர வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்

சென்னை:  தாமதப்படுத்தாமல் சட்ட  முன்வடிவுக்கு கவர்னர் அனுமதி தர வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை சட்ட முன்வடிவு தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கேட்கப்பட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து தந்திருக்கிறோம். முழுமையான தடை என்பது அரசியல் அமைப்பு கூறும் 19/1 ஜி-க்கு எதிரானதாகும் என்று கவர்னர் சொல்லி இருக்கிறார். அதற்கு நாம் சொல்லியிருக்கிற பதில், இந்த சட்டம் அரசியல் அமைப்பு கூறுகளுக்கு உட்பட்டுதான் இருக்கிறது என்பதை ஆதாரத்துடன் பதில் தெரிவித்து இருக்கிறோம். ஆன்லைன், ஆப்லைன் என்பதை வேறுபடுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். நாங்கள் வேறுபடுத்தி இருக்கிறோம்.

ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுக்களை வித்தியாசப்படுத்தவில்லை என்று சென்னை நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.  ஆப்லைன் என்பது நேராக ஒருவருக்கொருவர் விளையாடுவது. அதில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் ஆன்லைன் என்பது, அதில் என்ன புரோகிராம் செட் பண்ணி வைக்கப்பட்டுள்ளதோ அதன்படி விளையாடக்கூடியது. எனவேதான் ஆப்லைனை விட்டுவிட்டு, ஆன்லைன் சூதாட்டத்தைதான் நாம் தடை செய்திருக்கிறோம். அந்த வித்தியாசத்தையும் வேறுபடுத்தி காட்டி இருக்கிறோம்.

 குறிப்பிடத்தக்க அளவு தடை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது என்று கவர்னர் சொல்லி இருக்கிறார். இதற்கும் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை கவர்னர் நிச்சயம் ஏற்றுக்கொண்டு, அந்த சட்டத்துக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம். தற்போதுள்ள அவசர சட்டத்தின் மூலம் 27ம் தேதி (நாளை) வரை நடவடிக்கை எடுக்க முடியும்.

இப்போது இரண்டு நாட்களாக ஆன்லைன் விளம்பரம் வர தொடங்கியுள்ளன. அதனால்தான், கவர்னரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்திருந்தோம். மேலும், தாமதப்படுத்தாமல் சட்ட முன்வடிவுக்கு அனுமதி தர வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற முழுமையான ஒரு சட்டம் இயற்றப்படவில்லை. தமிழகத்தில் தான் அனைத்து விவரங்களையும் சேகரித்து முழுமையான சட்டம் தெளிவாக இயற்றப்பட்டுள்ளது.

 சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் முன்னிலையில் தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. நாங்கள் கொண்டு வந்தால் மட்டும் போதாது. நாங்கள் கொண்டு வந்தால் தமிழகத்தில் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும். ஆந்திராவில் இருந்து ஒருவர் ஆன்லைன் மூலம் விளையாடினால் கட்டுப்படுத்த முடியாது.

அதனால் ஒன்றிய அரசு முன்வந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவான ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை, பரிசீலிப்பதாக ஒன்றிய அமைச்சர் பதிலுரையில் தெரிவித்தார். இந்த சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தவுடன், தமிழகத்தில் மிக சிறப்பாக நிறைவேற்றி ஏழை எளிய மக்களை காப்பாற்றுவோம். கவர்னர் எங்களை அழைத்தால் உடனடியாக அவரை சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

கவர்னருக்கே வெளிச்சம்

தொடர்ந்து நிருபர்கள், ‘‘எதிர்க்கட்சி தலைவர் சந்திக்க வேண்டும் என்றால் கவர்னர் உடனே நேரம் கொடுக்கிறார். அதேநேரம் மக்களின் ஒரு முக்கிய பிரச்னைக்காக தமிழக அமைச்சர் ஒருவர் கவர்னரை சந்திக்க நேரம் கேட்டால் தரவில்லை. இதற்கு என்ன காரணம்?’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அது கவர்னருக்கே வெளிச்சம்’ என்று கூறினார் அமைச்சர் ரகுபதி.

Related Stories: