தீவிரவாதிகள் மீது நடவடிக்கை அரசியல் காரணத்தால் தடை போடுகிறது சீனா: ஐநா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஐநா: மும்பை தாக்குதலுக்கு முக்கிய  மூளையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இந்தியாவின் முயற்சிகள் அரசியல் காரணங்களால் தடுக்கப்படுகிறது என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக  மும்பையில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வழிநடத்தியது ஹபீஸ் சயீத், ஜக்கியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்டவர்கள் என தகவல் வெளியானது. பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஹபீஸ் சயீத், ஜக்கியுர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட நபர்களை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி கடந்த ஜூன் மாதம் ஐநா பாதுகாப்பு சபையின் கீழ் இயங்கும் அல்கொய்தா தடை குழுவின் தலைவருக்கு இந்திய தூதர் கடிதம் எழுதினார்.

ஆனால், போதுமான ஆவணங்களை இந்தியா வழங்கவில்லை என்று கூறி சீன அதிகாரிகள் குழு, இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்து விட்டது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஐநாவின் தீவிரவாத எதிர்ப்பு குழு, அல் கொய்தா தடை குழு தலைவர்களின் கருத்துகளை பாதுகாப்பு கவுன்சில் கேட்டறிந்தது. அப்போது ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் ருச்சிரா கம்போஜ் பேசுகையில், ‘‘மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளுக்கு அரசியல் காரணங்களால் தடை போடப்படுகிறது. ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தா தீவிரவாதிகள் அமைதி, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்,’ என்று குற்றம் சாட்டினார்.

Related Stories: