மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த 2 வடமாநில தொழிலாளிகளை கத்தியால் வெட்டி ரூ.2 ஆயிரம் பறிப்பு: 3 மணி நேரத்தில் 4 வழிப்பறி கொள்ளையர்கள் கைது

சென்னை: மெரினா கடற்கரையில் தூங்கி கொண்டிருந்த 2 வடமாநில தொழிலாளர்களை தலையில் கத்தியால் வெட்டி ரூ.2 ஆயிரம் பறித்த 4 வழிப்பறி கொள்ளையர்களை போலீசார் புகார் அளித்த 3 மணி நேரத்தில் கைது செய்தனர். சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் வாலிபர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று இரவு மெரினா கடற்கரையில் உள்ள வீரமாமுனிவர் சிலை பின்புறம் கட்டிட கூலித்தொழிலாளிகளான தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பீமாராஜ்(35) மற்றும் மேற்கு வங்கத்தை சேர்நத் சபீர் (29) ஆகீயோர் மணல் பரப்பில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கஞ்சா போதையில் வந்த 4 பேர் தூங்கி கொண்டிருந்த 2 பேரிடம் கத்தி முனையில் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் அவர்களிடம் இருந்து தப்பிக்க சத்தம் போட்டனர். இதனால் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் கையில் வைத்திருந்த கத்தியால் பீமா ராஜ் மற்றும் சபீரை தலையில் பலமாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

 ரத்த வெள்ளத்தில் உயிருக்கு 2 பேரும் போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து அருகில் இருந்த பொதுமக்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் 2 வடமாநில தொழிலாளர்களை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு பீமாராவுக்கு தலையில் 12 தையல்களும், சபீருக்கு தலையில் 20 தையல்களும் போடப்பட்டு ஆபத்தான நிலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து சம்பவம் நடத் 3 மணி நேரத்தில் மாட்டான்குப்பத்தை சேர்ந்த கார்த்திக்(21), சலீம்(21)ஜீவா(20), விக்னேஷ்குமார்(23) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories: