வேலூர் பெருமுகையில் மணல் அள்ளும்போது பாலாற்றில் சிவலிங்கம்,கோயில் தூண்கள் மீட்பு-வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு

வேலூர் : வேலூர் பெருமுகை பாலாற்றில் மணல் அள்ளும்போது சிவலிங்கம், கோயில் தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர் அடுத்த பெருமுகை பாலாற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மணலை அள்ளி விற்பனை நிலையத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கிருந்து பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலாறு கரையோரம் மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது 10 அடி அழத்தில் மணல் அள்ளும்போது அங்கு கற்களால் ஆன சிவலிங்கம் மற்றும் கோயில்கள் தூண்கள், சிறிய வகையான செதுக்கிய கற்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக அப்பகுதியில் மணல் அள்ளும் பணியை தொழிலாளர்கள் தற்காலிகமாக நிறுத்தினர். தொடர்ந்து இதுகுறித்து அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

 

அங்கு மணலில் புதைந்து இருந்த சிவலிங்கத்தின் அடிபகுதி (ஆவுடையார்) ஒன்றும், கோயில் தூண்களும் கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். இருப்பினும் அந்த பொருட்களை அங்கிருந்து கொண்டு செல்லவில்லை. தொடர்ந்து  வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் மேலும் கற்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு ஆராய்ச்சி பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: