ஜல்லிக்கட்டு வழக்கு விவகாரத்தில் ஆதாரமற்ற புகைப்படங்கள் தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசார வாதம்

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு விளையாட்டு விவகாரத்தில் ஆதாரமற்ற புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கியதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 2 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழக அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உட்பட 50க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்து கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘மூன்று வாரத்தில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்கள் அனைத்து தரப்பினரும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்,’ என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன்னதாக தமிழக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதத்தில், ‘கர்நாடகாவின் - கம்பாலா, தமிழ்நாட்டின்- ஜல்லிக்கட்டு, மகாராஷ்டிராவின் - ரேக்ளா தொடர்பான சட்டத்தையே இங்கு எதிர்கிறோம். 2017ம் ஆண்டு தமிழகத்தில் தமிழக மிருக வதை தடுப்புச் சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது. இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைகின்றன. இது தொடர்பான ஆவணங்கள், புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்,’ என தெரிவித்தார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, குமணன், ‘ஜல்லிக்கட்டு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் எவ்வித ஆதாரங்களும், ஆய்வும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டின் சாராம்சம் மற்றும் முக்கியத்துவம் குறித்து நாங்கள் விரிவாக சமர்ப்பிக்கிறோம். மேலும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள எந்த மனுவிலும் அதன் சட்ட வரைவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை எதிர்த்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை. எனவே, இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தது கிடையாது. மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான காணொளியை கண்டால் மட்டுமே அதனை தெரிவித்துக் கொள்ள முடியும். இதில், 1.11 லட்சம் மாடுகள் பங்கேற்றுள்ளன.

அதில், எத்தனை மாடுகள் காயம் ஏற்பட்டது என மனுதாரர் தரப்பினரால் தெரிவிக்க வேண்டும். ஏனெனில், இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கு பல்வேறு தகுதிகள் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், உரிய விதிமுறைகளின்படி தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது,’ என தெரிவித்தார். இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘குத்துச்சண்டை, வாள் சண்டை போன்ற மனிதர்கள் ஈடுபடும் சண்டையில் கூட ஒருவருக்கொருவர் துன்பப்படுத்துதல் என்பது இருக்கிறது. குத்துச் சண்டையில் சமயத்தில் போட்டியாளர்கள் இறந்தே கூட போகிறார்களே? மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக, குதிரைப் பந்தயம், யானை பந்தயம் நடத்துவதை அந்த விலங்குகள் மகிழ்ச்சியாக விரும்பியா பங்கேற்கிறது. மேலும், ஜல்லிக்கட்டு, கம்பாலா போன்ற விளையாட்டுகள் நடக்கும்போது அதற்காக டிக்கெட் விற்கப்படுகிறதா? திரைப்படங்களில் விலங்குகள் பயன்படுத்தப்படுகிறது, அவை காட்சிப்படுத்துவதற்கான விலங்குகளாக இருந்தாலும், இல்லையென்றாலும் அனுமதி பெற்று பயன்படுத்தப்படுகிறது. அதை உறுதி செய்வதற்கான சட்டங்களாக எது உள்ளது? இத்தகைய விஷயங்களுக்காக மட்டும்தான் அந்த விலங்குகள் பயன்படுத்தப்பட வேண்டும் என  வகுக்கப்பட்டு இருக்கிறதா?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: