இக்கட்டான காலக்கட்டங்களில் கலைஞரிடம் தான் ஆலோசனை பெற்றேன்: சோனியா காந்தி பெருமிதம்

சென்னை: கலைஞர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, எம்.எம்.அப்துல்லா, இரா.கிரிராஜன், கனிமொழி சோமு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்று அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து சோனியா காந்தி அளித்த பேட்டியில், ‘‘கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல முறை அவரை சந்தித்து, அவரோடு இணைந்து செயல்பட்டதை தற்போது நினைவு கூர்கிறேன். அவரது சந்திப்பும், அவரது வார்த்தைகளும் என்றுமே என்னால் மறக்க முடியாதவை ஆகும். முக்கியமான மற்றும் இக்கட்டான காலக்கட்டங்களில் கலைஞர் அவர்களிடம் தான் ஆலோசனைகளை கேட்டு பெற்றேன். மேலும் அதன் மூலம் பயனும் அடைந்தேன்.

எனவே மகிழ்ச்சியான இந்த நாளில் தி.மு.க.வினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மக்களவை தேர்தல் விவகாரத்தை பொருத்தமட்டில் கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் விதமாக தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ராகுல் காந்தி பேசுகையில், ‘‘கலைஞர் மு.கருணாநிதியைப் பற்றி கூற வேண்டுமானால் நிறைய தெரிவிக்கலாம். குறிப்பாக தமிழ் மொழியை பாதுகாத்து அதன் கலாச்சாரத்தை அவர் உயர்த்தி நிறுத்தியவர். மேலும் அரசியலமைப்பில் கலைஞர் அவர்கள் ஒரு மைல் கல்லை உருவாக்கியவர். இந்த மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் மிகுந்த பெருமை கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பாக டி.ராஜா, சீத்தாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கலைஞரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து டெல்லி ஜல் விகார் பகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

 

The post இக்கட்டான காலக்கட்டங்களில் கலைஞரிடம் தான் ஆலோசனை பெற்றேன்: சோனியா காந்தி பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: