கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான இளம்பெண்ணை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும்: யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியான ஸ்வாதி என்ற இளம்பெண்ணை ஆஜர்படுத்த வேண்டும்.  அவருடன் யாரும் சந்திக்கவோ, பேசவோ அனுமதிக்க கூடாது என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த ஸ்வாதி என்ற இளம்பெண்ணை காதலித்தார். கடந்த 23.6.2015ல் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி போலீசார், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதில் இறந்தவர்கள் இருவர் போக  யுவராஜ் உட்பட 15 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து கடந்த 8.5.2019ல் மதுரை மாவட்ட 3வது கூடுதல் நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) மாற்றப்பட்டது. இதில், யுவராஜ், டிரைவர் அருண் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.இதை எதிர்த்து 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் நேற்று அளித்த உத்தரவில், ‘‘விசாரணை நீதிமன்றத்தின் அறிக்கையை பார்க்கும்போது வழக்கின் துவக்கில் இருந்தே கோகுல்ராஜை காதலித்த ஸ்வாதி முக்கிய சாட்சியாக இருந்துள்ளார். மாஜிஸ்திரேட்டிடமும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கிடையில் ஏதோ நடந்துள்ளது. இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத விசாரணை நீதிமன்றம், அப்பெண்ணின் சாட்சியத்தை நிராகரித்துள்ளது. துறவிகளைப் போல தவறுக்கு எதிரான சமநிலையை இந்த நீதிமன்றத்தால் பார்க்க முடியாது.

நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் ஸ்வாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்கவே நீதிமன்றம் விரும்புகிறது. இது கட்டாயமும், தேவையானதுமாகும். இல்லாவிட்டால், நீதித்துறையின் தோல்விக்கு இதுவே காரணமாக அமைந்துவிடும். எனவே, பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை நாமக்கல் எஸ்பி வழங்க வேண்டும். ஸ்வாதியை யாரும் சந்திக்கவோ, போனில் பேசுவதையோ அனுமதிக்கக் கூடாது. முக்கியமான சாட்சியான அவரை எந்தவித அச்சமுமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை அதிகாரி, ஸ்வாதியை உரிய பாதுகாப்புடன் நீதிபதியின் அறையில் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று கூறி விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: