ரேஷன் கடை பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்: பணி நிரந்தரம் செய்ய தீர்மானம்

மதுராந்தகம்: ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மதுராந்தகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லோகியா முன்னிலை வகித்தார். மதுராந்தகம் ஒன்றிய தலைவர் ராமு வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் எம். சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் குணசுந்தரி, மாவட்ட பொருளாளர் கணேசன் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், ‘’ஓய்வுப்பெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு கருணை உதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, பணியாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அவரவர் கணக்கில் வருங்கால வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். அப்படி செலுத்தும் பட்சத்தில் பணியாளர்களுக்கான நியாயமான பண பலன்கள் கிடைக்கப் பெறும். தற்போது வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனை தவிர்க்க வேண்டும், ரேஷன் கடைகளில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். கமிஷன் அடிப்படையில் ரேஷன் கடையில் பணிபுரியும் மகளிர் சுய உதவி குழுவினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏடிஎம் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் மற்றும் செய்யூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: