சீர்காழி, தரங்கம்பாடியில் மழையால் பாதித்த 1.61 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணம் விநியோகம்

சீர்காழி: வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக டெல்டாவில் கடந்த 11, 12ம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடியில் ஆயிரக்கணக்கான வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது. 78 தற்காலிக முகாம்களில் 1,81,764 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. மேலும், கடலூர், மயிலாடுதுறையில் மழை பாதிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 14ம் தேதி நேரடியாக பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது சீர்காழியில் அவர் அளித்த பேட்டியில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் வயல்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படும். மழையால் பாதித்த மக்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள 145 ரேஷன் கடைகளில் 99,518 குடும்ப அட்டைதாரர்கள், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள 94 ரேஷன் கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 239 ரேஷன் கடைகளில் 1,61,647 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி இன்று (24ம் தேதி) நடந்தது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தலச்சங்காடு ரேசன் கடையில் கலெக்டர் லலிதா தலைமை வகித்து பொதுமக்களுக்கு நிவாரண உதவியை வழங்கினார். தொடர்ந்து சீர்காழி அருகே மணி கிராமம் மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு நிவாரண உதவியை கலெக்டர் லலிதா வழங்கினார். இதில் எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இன்று விடுப்பட்டவர்களுக்கு நாளை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: