சபரிமலையில் 6 நாட்களில் 2.61 லட்சம் பேர் தரிசனம்: கேரள தேவசம் போர்டு அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். மண்டல கால பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியது: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு  திறக்கப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. நடைதிறந்த  6வது நாளான நேற்று முன்தினம் (22ம் தேதி) வரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 874 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மண்டல கால பூஜை தொடங்கிய 17ம் தேதியன்று 47,947 பேர் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன  நேரம் கூட்டப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணிக்குப் பதிலாக 3 மணிக்கும், மாலை 4 மணிக்குப் பதிலாக 3 மணிக்கும் நடை திறக்கப்படுகிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மாறியுள்ளது. வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது  குறைகள் மற்றும் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. saranam2022.23@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பக்தர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: