கிருஷ்ணன்கோவில் - ராஜபாளையம் பசுமை வழிச்சாலை திருமங்கலம் - கொல்லம் 4 வழிச்சாலை பணி ‘படு ஸ்பீடு’

*2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும்

திருவில்லிபுத்தூர் : திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட ராஜபாளையம் வரை உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துதல் முடிந்து சாலை அமைக்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை(என்.ஹெச் 208) திருமங்கலம், கல்லுப்பட்டி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புளியரை வழியாக கேரளா மாநிலம் கொல்லத்திற்கு செல்கிறது. தமிழக எல்லையில் உள்ள நாகர்கோவில், குமுளி, கோயம்புத்தூர், செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கேரளாவை இணைக்கும் சாலைகளில் குறுகலான, அதிக வளைவுகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக செங்கோட்டை வழியாக செல்லும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த சாலையில் சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அதிக அளவு செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் சபரிமலை நடை திறப்பு மற்றும் குற்றால சீசன் நாட்களில் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவு இருக்கும். மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் கேரளா மாநிலம் கொல்லம் வரையுள்ள 206 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையை(என் ஹெச் 208) நான்கு வழிச்சாலையாக(என் ஹெச் 744) தரம் உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

அதன்படி 2021-2022 ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை உட்பட 3,500 கிலோ மீட்டர் தூர சாலைகளை மேம்படுத்த ரூ.1.03 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சாலை மூலம் தொழில் மற்றும் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறும் என்பதால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையெடுத்து முதற்கட்டமாக திருமங்கலம் - ராஜபாளையம் இடையிலான 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருமங்கலம் முதல் வடுகபட்டி வரை சுமார் ரூ.541 கோடியும், வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரை சுமார் ரூ. 723 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கிருஷ்ணன்கோவில் முதல் ராஜபாளையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பசுமை வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இப்பகுதியில் சாலையின் இருபுறுமும் மரம் வளர்ப்பதற்காக கூடுதல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை மண் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பாலம் அமையும் இடங்கள், சாலை குறுக்கிடம் இடம், நகர் பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் மண் சாலை அமைக்கப்பட்டு விட்டது. தற்போது திருவில்லிபுத்தூர் அருகே சாலை அமைப்பதற்கான ஜல்லி, கிராவல் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையில் மதுரை மண்டலத்திற்குட்பட்ட திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான 71.6 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்க இரு பிரிவாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையாக முடிவடைந்து. அனைத்து துறையின் அனுமதி பெறப்பட்டு விட்டது. முதற்கட்டமாக மண் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இரு ஆண்டுகளுக்குள் திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான சாலை பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணன்கோவில் முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரை உள்ள 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பசுமை வழிச்சாலையாக அமைய உள்ளது’’ என்றார்.

Related Stories: