திருமூர்த்தி அணை நீர் மட்டம் அதிகரிப்பு கரையோர முட்செடிகள் அகற்றும் பணி தீவிரம்

உடுமலை : திருமூர்த்தி அணையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கரையோர பகுதியில் முட்செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மொத்தம் 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

இதுதவிர, உடுமலை நகருக்கும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும்  அணை மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.இதுதவிர, திருமூர்த்திமலையில் குருமலையாறு, குழிப்பட்டி பகுதிகளில் பெய்யும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து பஞ்சலிங்க அருவி வழியாக அணைக்கு வந்து சேர்கிறது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று நீர்மட்டம் 52.91 அடியாக இருந்தது.

கான்டூர் கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளதால், பாலாறு வழியாக வெறும் 49 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. 24 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அணையில் நீர்பரப்பு அதிகரித்து வருவதால், கரையோர பகுதிகளில் மண்டியிருந்த மரம், முள்செடி உள்ளிட்ட புதர்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.

சுமார் 4 கிமீ சுற்றளவுக்கு புதர்கள் வெட்டப்பட உள்ளன. ஒரு நாளைக்கு 200 மீட்டர் அளவுக்கு புதர்கள் வெட்டப்படுகின்றன. மேலும், அவசர காலங்களில் பயன்படுத்தவும், கால்வாய்களில் கசிவு ஏற்பட்டால் சரி செய்யவும்  தயார் நிலையில் அணையின் மேற்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: