நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.671 கோடியில் கட்டிய 75 கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: 4 புதிய அலுவலக கட்டிடப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.671.80 கோடி மதிப்பீட்டிலான 75 திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் ரூ.671 கோடியே 80 லட்சத்திலான 75 திட்டப் பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவைகளை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.   தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியத்தைச் சார்ந்த சிகரலப்பள்ளி மற்றும் 143 குடியிருப்புக்களுக்கு ரூ.31.82 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர்த் திட்டம் உள்பட மொத்தம் ரூ.111 கோடியே 24 லட்சத்தில் 6 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் கொடுங்கையூரில் ரூ.170.97 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நெசப்பாக்கத்தில் ரூ.47.24 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் உயர்தர மறுசுழற்சி நீர் நிலையம், போரூரில் நாளொன்றுக்கு 60 லட்சம் லிட்டர் திறன் கொண்ட புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம், புழல், புத்தகரம், சூரப்பட்டு மற்றும் கதிர்வேடு பகுதிகளுக்கு ரூ.82.61 கோடி மதிப்பீட்டில் விரிவான குடிநீர் வழங்கல் திட்டம் என மொத்தம் ரூ.398.51 கோடி மதிப்பீட்டில் 18 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

நன்னிலம் பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நவீன பேருந்து நிலையம், திருப்பூர் மாநகராட்சியில் ரூ.38.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட பழைய பேருந்து நிலையம் என மொத்தம் ரூ.109.56 கோடி மதிப்பீட்டில் 12 முடிவுற்ற நகராட்சி நிர்வாகத் துறை திட்டப் பணிகளை திறந்து வைத்தார். சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 18 புதிய பூங்காக்கள், மாதவரத்தில் பத்மாவதி நகர், விக்டரி பீல்டு தெரு, யானைக்கவுனி- சுந்தராபுரம், அண்ணா நகரில் நேரு நகர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய விளையாட்டுத் திடல்கள் மற்றும் அடையாரில் கோட்டூர்புரம் அடையாறு ஆற்றங்கரை அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் என ரூ.49.49 கோடி மதிப்பீட்டிலான 38 முடிவுற்ற சென்னை மாநகராட்சி பணிகளை திறந்து வைத்தார்.  

அதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் திருமுருகன் பூண்டி நகராட்சி- ராக்கிபாளையம் சாலை, சோளிங்கர் நகராட்சி - சித்தூர் சாலை, திருக்கோவிலூர் நகராட்சி - சேவலை சாலை, உளுந்தூர்பேட்டை நகராட்சி - சேலம் சாலை ஆகிய இடங்களில் தலா ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மொத்தம் ரூ.14 கோடியில் கட்டப்படவுள்ள 4 நகராட்சி அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், உட்பட பலர் கந்து கொண்டனர்.

* 143 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை

பேரூராட்சிகள் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 29 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 48 வாரிசுதாரர்களுக்கும், நகராட்சி நிர்வாகத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 66 வாரிசுதாரர்கள் என மொத்தம் 143 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 15 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Related Stories: