குடோனில் பதுக்கி வைத்திருந்த1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; காஞ்சிபுரத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதூர் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). அதே பகுதியில் தனது வீட்டின் பின்புறம் குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையிலான போலீசார் மேற்கண்ட பகுதியில் உள்ள குடோனை நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது குடோனில் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் 1 டன் 50 கிலோ  ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுகாவேரிப்பாக்கம் பகுதி மக்களிடம் ரேஷன் அரிசியை கிலோ 5 ரூபாய்க்கு வாங்கி, வடமாநில தொழிலாளர்கள் மற்றும் சாலையோர டிபன் கடைகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது  செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். குடோனில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்த  சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: