இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன்: காயத்ரி ரகுராம் ட்வீட்

சென்னை: இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரனுக்கும், OBC அணியின் மாநில பொது செயலாளர் திருச்சி சூர்யா சிவா-வுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம் அடுத்த 6 மாதம் பா.ஜ.,விலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம்; 6 மாதங்களுக்கு கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள்,அதை யாராலும் தடுக்க முடியாது. இடைநீக்கம் செய்தாலும் தேசத்திற்காக உழைப்பேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: