காலதாமதமாக பணிக்கு வருவதாக புகார் குடிமை பொருள் வழங்கல் துறையில் தலைமை செயலகக்குழு திடீர் ஆய்வு-தலைமை செயலரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் பணிக்கு காலதாமதமாக வருவதாக எழுந்த புகாரையடுத்து, தலைமை செயலக ஆய்வுக்குழுவினர் நேற்று குடிமை பொருள் வழங்கல் துறையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 50 சதவீத இருக்கைகள் ஊழியர்கள் இன்றி காலியாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக தலைமை செயலரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.

 புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வரவில்லை என்று வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி பதிவு செய்திருந்தார். அதன்படி சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜீவ் வர்மாவை அழைத்து அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இதையடுத்து, அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வருவதை துறை தலைவர்கள் ஆய்வு செய்து உறுதி செய்யவும், நேரத்தோடு பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென அனைத்து துறை தலைமைக்கும் நிர்வாக சீர்த்திருத்தத்துறையின் சிறப்பு செயலர் கேசவன் கடந்த மாதம் உத்தரவு ஒன்றை பிறத்திருந்தார். அதன் பிறகும், அலுவலகங்களில் ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வரவில்லை என்றும், அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

 இதையடுத்து, அரசு அலுவலகங்களை கண்காணிக்க, நிர்வாக சீர்திருத்த துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு தலைமை செயலர் ராஜீவ் வர்மா உத்தரவிட்டார். அதன்பேரில் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கண்காணிப்பாளர் கலியபெருமாள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணியில் இருந்துள்ளனர். மற்றவர்கள் குறித்த நேரத்திற்கு பணிக்கு வராததால் 50 சதவீத இருக்கைகள் காலியாகவே கிடந்தது.  இதை பார்த்து ஆய்வுக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 இதைத் தொடர்ந்து, அலுவலகத்தில் இருந்த பணியாளர்கள் வருகை பதிவேட்டை பார்வையிட்ட பிறகு, அதனை ஆய்வுக்குழு அதிகாரிகள் கையோடு எடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அனைத்து ஊழியர்களும் பணிக்கு வந்து வழக்கம்போல் தங்கள் பணியினை மேற்கொண்டனர். குடிமை பொருள் வழங்கல் துறையில் தலைமை செயலக ஆய்வுக்குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து தலைமை செயலக ஆய்வுக்குழு அதிகாரிகள் கூறுகையில், `குடிமை பொருள் வழங்கல் துறைக்கு ஊழியர்கள் குறித்த நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்று புகார் வந்தது. அதன்படி ஆய்வு செய்தபோது, 50 சதவீதம் பேர் மட்டுமே நேரத்தோடு பணிக்கு வந்துள்ளனர். இதுதொடர்பாக தலைமை செயலருக்கு அறிக்கை சமர்ப்பிப்போம். அதன் பிறகு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை பாயும். மேலும், இந்த ஆய்வு தொடரும்.’ என்றனர்.

Related Stories: