கலைஞர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: சைபர் க்ரைம் பிரிவில் திமுகவினர் புகார்

சென்னை: முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநில சைபர் க்ரைம் பிரிவில் திமுக ஐடி பிரிவு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்ட ஐடி பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் தினேஷ் (35) நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் திமுக ஐடி பிரிவில் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை தினமும் பார்ப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை ‘கட்டெறும்பு- பிஜேபி’ என்ற டிவிட்டர் கணக்கை பார்த்தபோது, எங்கள் கட்சியின் தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சை இணைத்து ரயிலில் அருவெறுக்கதக்க நிலையில் இருப்பது போல் சித்தரித்து அவதூறாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த நான் மற்றும் எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தோம். எனவே டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: