அரசு பள்ளி மாணவர்களுக்கு 26ம் தேதி முதல் நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் வரும் 26ம் தேதி துவங்குகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க நீட் தேர்வை மாணவர்கள் எழுத வேண்டும். அதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பால் கடந்த 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நேரடி பயிற்சி வகுப்பு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடு கடந்த சில நாட்களாக நடந்து வந்தன.

முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தமிழகத்தில் உள்ள 414 பிளாக்குகளில் ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்திற்கு 70 மாணவ-மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 11ம் வகுப்பில் 20 பேரும், 12ம் வகுப்பில் 50 பேரும் இப்பயிற்சி வகுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னையை பொருத்தவரை 10 மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டிற்கான பயிற்சி வகுப்பு வருகின்ற 26ம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

Related Stories: