மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு தென் மாநிலங்களில் என்ஐஏ விசாரணை: ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் குற்றவாளிக்கு தொடர்பு; 2 மாதத்துக்கு முன் ஒத்திகை பார்த்தது அம்பலம்

பெங்களூரு: மங்களூருவில் குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக தென் மாநிலங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முகமது ஷாரிக் என்பது உறுதியாகி உள்ள நிலையில், அவர் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளபதிகளுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ள அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பை நிகழ்த்த 2 மாதத்திற்கு முன்பே ஒத்திகை நடத்திய தகவலும் அம்பலமாகி உள்ளது.

கர்நாடக மாநிலம் தென்கனரா மாவட்டம், மங்களூரு நகரில் கடந்த 19ம் தேதி மாலை 4.30 மணி அளவில் ஆட்டோவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இந்த குண்டு வெடி சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் புருசோத்தம் மற்றும் பயணி இருவர் காயம் அடைந்தனர். ஆட்டோவில் இருந்து பல்வேறு டெட்டனேட்டர் பொருத்தப்பட்ட குக்கர் போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தீவிரவாத தாக்குதல் தான் என கர்நாடக மாநில போலீஸ் ஐஜி மற்றும் டிஜிபி பிரவீன் சூட் அறிவித்தார். ஆட்டோவில் பயணித்த பயணி தீவிரவாதியாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில் அவரை அடையாளம் காண போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்பு அவர் ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த முகமது ஷாரிக் என்று தெரிந்த நிலையில் ஷாரிக் குடும்ப உறுப்பினர்களை நேற்று போலீசார் மங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த தகவலின் படி முகமது ஷாரிக்(25) என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து மங்களூருவில் செய்தியாளர்களிடம் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலோக்குமார் கூறியதாவது: முகமது ஷாரிக் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மங்களூரு நகரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு வாசகங்களை எழுதியதற்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த ஷாரிக் பல்வேறு தீவிரவாத கும்பலிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தொடர் குண்டு வெடிப்பு ஒன்றை நடத்த தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தீட்டி வந்துள்ளார். ஷிவமொக்கா மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் 3 நபர்கள் வெடிகுண்டை தயாரித்து அதை கடந்த 16ம் தேதி வெடிக்க வைத்து சோதனை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு விசாரணைக்கு பிறகு போலீசார் கடந்த செப்டம்பர் 20ம் தேதி நதிக்கரையில் வெடிகுண்டு பரிசோதனை செய்த புகாரில் மாஸ் முனிர் மற்றும் சைய்யத் யாசின் ஆகியோரை கைது செய்தனர். அவர்களது வீட்டில் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் போல்ட், நட், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. ஐஎஸ் அமைப்புடன் அவர்கள் தொடர்பில் இருந்த டிஜிட்டல் ஆவணங்கள், நதிக்கரையில் குண்டு வெடிப்பை பரிசோதித்த வீடியோ போன்றவற்றை கைபற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் ஷாரிக் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவரது நண்பர்கள் கைதை அடுத்து ஷாரிக் இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்தார். நண்பர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஷிவமொக்கா மாநகரில் இருந்து தப்பித்து போலியான ஆதார் அட்டையை பயன்படுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி மைசூருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். அங்கு மொபைல் போன் சர்வீஸ் செய்யும் தொழில்நுட்ப பயிற்சி பெற்று வருவது போல தங்கியிருந்து கோயம்புத்தூர், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

அதன் பிறகு கடந்த வாரம் மைசூருவிலிருந்து மங்களூரு நகருக்கு பஸ் மூலமாகவே பயணித்து பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்துள்ளான். 19ம் தேதி திட்டமிட்டபடி வெடிகுண்டை எடுத்து செல்லும்போது ஆட்டோவில் குண்டு வெடித்துள்ளது. இது தற்செயலாக நடந்த சம்பவம் கிடையாது. முகமது ஷாரிக் மூலம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். பி.காம் பட்டதாரியான ஷாரிக்கிற்கு வெடிகுண்டு தயாரிக்க தெரியாது என்றாலும் அதை தயாரிக்க தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் உதிரி பொருட்கள் வாங்கி, அதை பயன்படுத்தி சரியாக இணைக்காமல் தயாரித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் மற்றும் கர்நாடக போலீசார் இணைந்து ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள ஷாரிக் வீடு, அவரது உறவினர்கள் வீடு நண்பர்கள் வீடு என பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்‌. மேலும் மாநிலம் முழுவதும் ஷாரிக் சார்ந்த 11 இடங்களில் சோதனை செய்த போது மைசூருவில் அவன் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து வெடிகுண்டு செய்ய தேவையான உபகரணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அவரது மடிக்கணினியில் இருந்து குக்கர் பாம் செய்யப்பட்ட பிறகு அதனுடன் அவன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அவன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இவ்வாறு கூடுதல் டிஜிபி தெரிவித்தார். இந்த சம்பவம் தீவிரவாத செயல் என்று தெரிய வந்துள்ளதால், தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) 5 பேர் கொண்ட குழு தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

* 2 மாதத்தில் 8 முறை விசிட்

கடந்த 6 மாதங்களாக முகமது ஷாரிக்குடன் செல்போனில் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள். மைசூருவில் வசித்து வந்த முகமது ஷாரிக், கடந்த இரண்டு மாதங்களில் மங்களூருக்கு 8 முறை வந்து இடம் தேர்வு செய்து சென்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

* தகவல் அளித்தால் ரூ.2 லட்சம் பரிசு

முகமது ஷாரிக்குக்கு பல ஆண்டுகளாக சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த ஷாரிக்கிற்கு தீர்த்தஹள்ளியை சேர்ந்த அப்துல் மதீன் என்பவர் உதவியாக இருந்ததாகவும். அவரை அடையாளம் கண்டு தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்குவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

* கூட்டாளி கைது

இதனிடையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு சொந்தமான செல்போனில் தொடர்பு கொண்டவர்களில் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த முகமது ருஹுல்லா அதிகமாக பேசி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி மைசூரு போலீசார் சென்றபோது, பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருப்பது தெரியவந்தது. மைசூரு கிழக்கு மண்டல போலீசார், உடனடியாக பெங்களூரு மாநகரின் காடுகொண்டனஹள்ளிக்கு வந்து, அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த முகமது ருஹுல்லாவை நேற்று பகல் கைது செய்து மைசூரு அழைத்து சென்றனர்.

* கேரளாவுக்கு வந்தது ஏன்?

இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரிக் கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மற்றும் கேரளாவுக்கு சென்று வந்தது தெரியவந்தது. எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவுக்கு வந்த இவர், சிலரை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து கேரள தீவிரவாத தடுப்புப் படை போலீசார் மங்களூரு விரைந்துள்ளனர். ஷாரிக் ஆலுவா வந்தது ஏன்?, அவர் யார் யாரை எல்லாம் சந்தித்து பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: