அஞ்சலகங்களில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி ஓய்வூதியம் பெறும் பூசாரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்: கோவில் பூசாரிகள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: அரசு ஓய்வூதியம் பெறுவோர் அஞ்சலகங்கள் மூலமும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்ற வசதியை இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் கிராம கோயில் பூசாரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோயில் பூசாரிகள் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து கோயில் பூசாரிகள் நலச் சங்க தலைவர் வாசு வெளியிட்ட அறிக்கை: கிராமப்புற கோயில்களில் பணியாற்றி 60 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஏழைப் பூசாரிகள் இந்து சமய அறநிலையத் துறை மூலம் வங்கிகள் வழியாக மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

இவர்கள் ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் இந்த வாழ்நாள் சான்றிதழை நேரடியாக சென்று சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் 65 வயதுக்கும் மேற்பட்ட  பூசாரிகள் தங்கள் இல்லங்களில் இருந்து சுமார் 60 முதல் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட உதவி ஆணையர் அலுவலகங்களுக்குச் சென்று அவர் வருகைக்காகக் காத்திருந்து சான்றிதழைச் சமர்ப்பிப்பது பெரும் சிரமமாக உள்ளது. வாகன வசதி மூலம் சென்று வர வேண்டுமானால் ரூ1,000க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது.

சில பூசாரிகள் வயது முதிர்ச்சியின் காரணமாக நடமாட முடியாமல் இருந்து வருகின்றனர். எனவே அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில் அரசின் பிற ஓய்வூதியதாரர்கள் அஞ்சலகங்கள் மூலம் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பித்து வருவது போல கிராமப்புற கோயில் ஏழைப் பூசாரிகளுக்கும் அந்த வசதியை விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலம் அந்த வயது முதிர்ந்த, நடமாட முடியாத, படுக்கையில் இருக்கும் ஏழைப் பூசாரிகளின் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். எனவே அறநிலைத்துறை ஆணையர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: