‘மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ எனக்கூறி டிவிட்டரில் டிரம்ப் மீதான தடையை நீக்கினார் மஸ்க்

நியூயார்க்: கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையோர் ஆதரவு தெரிவித்ததால், அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீதான டிவிட்டர் தடையை எலான் மஸ்க் நீக்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம், முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவரது ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில், ஆதரவாளர்களை தூண்டிவிட்டதே வன்முறைக்கு காரணமாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்குவதாக அப்போதைய டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரர் எலான் மஸ்க் வாங்கிய பிறகு, டிரம்ப் டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல், டிரம்ப் மீதான தடையை நீக்கலாமா? என டிவிட்டர் பயனாளர்களிடம் மஸ்க் கருத்துக் கணிப்பை நடத்தினார். இதில் ஏராளமானோர் வாக்களித்தனர்.

டிவிட்டரின் தினசரி பயனாளர்கள் 23 கோடி பேரில் 1.5 கோடி பேர் வாக்களித்தனர். இதில் 51.8 சதவீதம் பேர் ஆம் என்றும், 48.2 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, மஸ்க் நேற்றைய தனது டிவிட்டில், ‘‘மக்கள் கருத்துப்படி, மீண்டும் டிரம்ப் வரவேற்கப்படுவார். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’’ என கூறியிருந்தார். உடனடியாக, 22 மாதங்களுக்குப் பிறகு டிரம்ப்பின் டிவிட்டர் கணக்கு செயல்படத் தொடங்கியது. அவரது பாலேயர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக இருந்த நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில் 21 லட்சமாக அதிகரித்தது. டிரம்ப்பின் குடியரசு கட்சி தலைவர்களும் டிவிட்டரில் அவரை வரவேற்று டிவிட்களை பதிவிட்டனர்.

மீண்டும் வரமாட்டேன் டிரம்ப் அதிரடி டிவிஸ்ட்

தடை நீக்கப்பட்டதால், டிரம்ப் மீண்டும் டிவிட்டரில் கருத்துகளை பதிவிடுவார் என எதிர்பார்த்த நிலையில் திடீர் திரும்பமாக அவர் ‘மீண்டும் திரும்ப மாட்டேன்’ என கூறி உள்ளார். இதுதொடர்பாக டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘மஸ்க்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் டிவிட்டரை வாங்கியதை வரவேற்கிறேன். ஆனால் இப்போது அவர்களுக்கு நிறைய பிரச்னை இருக்கிறது. இதிலிருந்து மீண்டு வருவார்களோ என்பதை பொறுத்திருந்த பார்ப்போம். நிச்சயம் மஸ்க் புத்திச்சாலி. அதே சமயம், நான் மீண்டும் டிவிட்டரில் வரமாட்டேன் என்றே நினைக்கிறேன். ஏனெனில், எனது டிரம்ப் மீடியா, டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப்பான டுரூத் சோஷியல் சமூக வலைதளம் டிவிட்டரை விட சிறப்பாக உள்ளது. நிறைய பேர் அதில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யாரும் டிவிட்டருக்கு மீண்டும் திரும்ப விரும்பமாட்டார்கள்’’ என கூறி உள்ளார். இதனால் மஸ்க் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Related Stories: