சபரிமலையில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்: நிலக்கல்- பம்பை இடையே கூடுதல் பஸ்கள்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நேற்று விடுமுறை தினத்தையொட்டி கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்  காணப்பட்டது. ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேல் பக்தர்கள்  தரிசனம் செய்தனர். அவர்களுக்காக கூடுதல்  பஸ்கள் இயக்கப்பட்டன. சபரிமலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும்  நீக்கப்பட்டுவிட்டதால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இருந்ததை போல மண்டல  காலத்தில் பக்தர்கள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.

கடந்த 16ம் தேதி  மாலை 5 மணிக்கு நடை திறந்த நேரம் முதல் பக்தர்கள் சபரிமலையில் குவிந்து  வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக 80  ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலை வந்தனர். நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள்  சபரிமலையில் குவிந்தனர்.

 காலை 3 மணிக்கு நடை திறக்கும் போது  பக்தர்கள் வரிசை 1 கிமீ தொலைவில் உள்ள மரக்கூட்டம் பகுதி வரை காணப்பட்டது.  தரிசனத்திற்கும், நெய்யபிஷேகம் செய்வதற்கும் பக்தர்கள் பல மணி நேரம்  வரிசையில் காத்து நின்றனர். நேற்று 1 லட்சத்திற்கும் அதிகமான  பக்தர்கள் தரிசனம் செய்தனர். கூட்டம்  அதிகரித்து இருந்ததால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நிலக்கல்-  பம்பை இடையேயும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள்  இயக்கப்பட்டன.

Related Stories: