திறந்தவெளி வேண்டாம்... பொதுக்கழிப்பறையை பயன்படுத்தி சுகாதாரமான தேனி மாவட்டத்தை உருவாக்குவோம்: கலெக்டர் வேண்டுகோள்

தேனி: மனித சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001&ம் ஆண்டு முதல்முறையாக நவ.19ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது. அதன்பின், 2013 முதல் நவ.19&ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். உலக கழிப்பறை தினத்தையொட்டி சீலையம்பட்டியில் நடந்த சுகதார விழிப்புணர்வு ஓட்டத்தை கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலையம்பட்டியில் நேற்று உலக கழிப்பறை தினத்தையொட்டி தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் சுகாதார விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் முரளீதரன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்டவர்களை சீலையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சியின்போது கலெக்டர் முரளீதரன் பேசும்போது, ‘‘ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும்,நமது சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ளும் வகையில் நவம்பர் 19ம் தேதி உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடாது. பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்தி சுகாதாரமான தேனி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பொதுக்கழிப்பறை தவிர குடியிருப்புகளில் கழிப்பறை கட்ட விரும்புவோருக்கு தனிநபர் கழிப்பறை கட்ட ரு.12 ஆயிரம் அரசு மானியம் வழங்கி வருகிறது’’ என்றார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணாத்துரை, தேனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ஜெகதீசசந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் இந்திரஜித் நன்றி கூறினார்.

Related Stories: