அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சோலார் மின்வேலி திட்டம் செயல்படுத்தப்படுமா?: தேவாரம் மலையடிவார பகுதி விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் விவசாயிகளின் அச்சத்தை போக்கிட அ.தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பபட்ட சோலார் மின்வேலி அமைக்கும் திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவாரம், வருசநாடு பகுதி, மேகமலை போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன.

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே யானைகள், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வாழ்கின்றன. இதற்கான வாழும் தகவமைப்பு உள்ள அடர்ந்த காடுகள் உள்ள இடமாக தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், காடுகள் தான் உள்ளது. காரணம் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் காட்டு யானைகள் வாழ்வதற்குரிய சூழல், காட்டு யானைகள் நடந்து செல்ல பாதைகள், இதன் முக்கிய உணவாக உள்ள மூங்கில் மரங்கள், நீறுற்றுகள், என மலையடிவாரத்திற்கும் மேல் உள்ளது. இதனால் தேவாரம் மலையடிவாரத்தில் அதிக அளவில் காட்டு யானைகள் நடமாட்டம் வழக்கமாக இருக்கிறது. இங்கு தற்போதைய கணக்கின்படி 5 யானைகள் வரை வாழ்கின்றன. அதே நேரத்தில் காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வாழ்கின்றன.

இவை அவ்வப்போது திடீரென மலை அடிவாரத்தை விட்டு கீழே உள்ள விவசாய நிலங்களுக்குள் வருவதும் தீவனங்கள் கிடைக்காத போது விவசாயிகள் இரவு, பகலாக பாதுகாத்த மரவள்ளி கிழங்கு, அவரை, தென்னை, வாழை, தக்காளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை துவம்சம் செய்து விட்டு மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

தேவாரம் சாக்க லூத்து, ராமக்கல் மெட்டு, சதுரங்கப்பாறை உள்ளிட்ட பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இதன் நடமாட்டம் குறைந்தாலும், விவசாயம் அதிகம் செய்யக்கூடிய மலையடிவாரத்தை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வந்து விவசாயிகளை அச்சுறுத்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. எனவே துவம்சம் செய்யும் பயிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடனடியாக சோலார் மின்வேலி அமைக்கப்பட வேண்டும் என்பது தேவாரம் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. விவசாய பயிர்கள் யானைகளாலும், காட்டு பன்றிகளாலும், நாசப்படுத்தப்படும்போது, தேவாரம் விவசாயிகள் இதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், இழப்பீடு கேட்டும் தேனி கலெக்டர், மற்றும் உத்தமபாளையம் வனத்துறையினரை நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகள் கேட்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த 2001ம் ஆண்டு முதல் அதிக அளவில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் காடுகளை ஒட்டிய நிலங்களில் பெருமளவில் விளைநிலங்களாக மாறிவிட்டன. மறுபுறம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் மரங்களின் எண்ணிக்கை கொஞ்சம், கொஞ்சமாக குறைந்து விட்டது.

இதே போல் யானைகள் தீவனங்களாக உண்ணக்கூடிய மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து இருப்பதும், அடர்ந்த காடுகளில் இருந்து மக்கள் வாழும் நிலங்களுக்கு யானைகள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. யானைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விளைநிலங்களுக்குள் செல்வதற்கு விவசாயிகள் அச்சம் தொடர்கிறது. இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று யானைகள் இடப்பெயர்ச்சி அடையும்போது, விளைபொருட்கள் சேதமடையாமல் இருக்க குறைந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதும் விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தேவாரம் கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரத்தை சுற்றிலும் யானைகள் அதிகம் இறங்கக் கூடிய இடங்கள் என மொத்தம் 13 கிமீ கணக்கிடப்பட்டது. இந்த 13 கிமீ நிலங்களில் குறைந்த அழுத்த சோலார் மின்வேலி அமைத்து, யானைகளுக்கும், விவசாய பயிர்களுக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக சிறு அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையில் சோலார் மின்வேலி அமைக்க திட்டமிடப்பட்டது.

இந்த மின்வேலி அமைக்கப்பட்டால் யானைகள் உயிரிழப்பு என்பது ஏற்படாது. காரணம் குறைந்த அழுத்த சோலார் மின்வேலியால் இதன் அதிர்வுகள் மூலம் யானைகள் மீண்டும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று விடும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி காட்சி காலத்தில் அத்தியவசியமான இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதே நேரத்தில் 2019ம் ஆண்டு 2.5 கிமீ தூரம் மட்டும் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பிள்ளையார் ஊற்று பகுதிகளில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டு அதுவும் பிற்பகுதியில், தற்போது செயலிழந்து உள்ளது. இதனால் ஒவ்வொரு வருடமும் காட்டுயானைகளாலும், காட்டு பன்றிகளாலும் விளைபயிர் இழப்புகள் தொடர்கிறது.

Related Stories: