தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது தொடரும் நடவடிக்கை: பெரியகுளத்தில் 300 மூட்டை பறிமுதல்; 2 பேர் கைது

பெரியகுளம்: பெரியகுளத்தில் கடத்துவதற்காக வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு. கேரள எல்லையில் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் கிலோ ரூபாய் 15 முதல் 18 வரை விலைக்கு வாங்குகின்றனர். குறிப்பாக தமிழக எல்லை பகுதியான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் தேனி, போடி பகுதிகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் வீடு வீடாக சென்று, படி ஒன்று ரூ.10 ெகாடுத்து வாங்குகின்றனர். அதை 50 கிலோ சிப்பமாக மூட்டையாக மாற்றி அதை கேரளாவிற்கு ஜீப் மற்றும் லாரிகளில் கடத்தி செல்கின்றனர்.

கம்பம் மற்றும் குமுளி வழியாக நாள்தோறும் சுமார் 10 டன் முதல் 50 டன் வரை கேரளாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கேரள எல்லையான கம்பமெட்டு மற்றும் குமுளி வரை மட்டுமே ரேஷன் அரிசி கடத்தி சென்றால் போதுமானது. அங்கிருந்து எர்ணாகுளம், திருச்சூர், காலடி போன்ற இடங்களில் உள்ள அரிசி மில்களுக்கு கேரள அரிசி வியாபாரிகளால் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ரேஷன் அரிசி பாலீஸ் செய்து பட்டை தீட்டி, தரம் பிரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு தரமான இட்லி அரிசியாகவும் ,சாப்பாட்டு அரிசியாகவும் 5, 10 மற்றும் 25 கிலோ மூட்டையாக மாற்றி கிலோ ரூ.30 முதல் 40 வரை மறு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 வரை மட்டுமே அதிகளவில் கடத்தி செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தகவல் ெதரிவித்தனர்.

இந்த ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்ட அளவில் வருவாய் துறை மூலமாக பறக்கும் படை துணை தாசில்தார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், பெரியகுளத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்துவதற்காக வீடுகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் காஷா ஷெரீப்பிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெரியகுளத்திலுள்ள வீடுகளில் தாசில்தார் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினார்.

வைத்தியநாதபுரம் பகுதியில் லட்சுமணன் என்பவருக்கு சொந்தமான வீட்டிலிருந்து லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து 50 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் லாரியை தாசில்தார் காஷா ஷெரீப் பறிமுதல் செய்தார். இதுதொடர்பாக லட்சுமணன் மற்றும் லாரி டிரைவர் சத்தியநாராயணன் ஆகியோரை பெரியகுளம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இப்பகுதியிலுள்ள 4 வீடுகளில் நடத்திய சோதனையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே இரவில் பெரியகுளத்தில் 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: