ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறுவதால் டிவிட்டர் அலுவலகங்கள் மூடல்: நிபுணர்களுடன் மஸ்க் ஆலோசனை

நியூயார்க்: எலான் மஸ்க் காலக்கெடு விதித்ததைத் தொடர்ந்து ஊழியர்கள் வெளியேறி வருவதால் பல்வேறு பகுதிகளில் உள்ள டிவிட்டர் அலுவலங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். 7,500 ஊழியர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட அவரது அதிரடி நடவடிக்கைகளினால் டிவிட்டர் நிறுவனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வேலை உள்ளிட்ட சலுகைகளை நீக்கியதுடன், நீண்ட நேர வேலையா அல்லது 3 மாத ஊதியத்துடன் விடுப்பா? என்பது பற்றி ஆலோசிக்க 2 நாள் கெடு விதித்து, ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி அழுத்தம் கொடுத்தார். இதனால், ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனால், வேலையில் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் மேலும் பலர் வேலையை விட்டு விட திட்டமிட்டுள்ளனர். இதனால், டிவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள் பல நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

* அமேசானில் 300 இந்தியர்கள் வேலை காலி

டிவிட்டர், பேஸ்புக்கை தொடர்ந்து 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி உள்ள அமேசான் நிறுவனம், இந்த நடவடிக்கை வருடாந்திர செயல்பாட்டு கூட்டத்தின் மறுஆய்வு திட்டம் தான், இந்த பணிநீக்கம் அடுத்தாண்டும் தொடர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அமேசானின் பணி நீக்க நடவடிக்கையினால், இந்திய ஊழியர்கள் 300 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: