அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ரா பதவி நீட்டிப்பு

புதுடெல்லி: அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளில் ஒன்றான அமலாக்கத்துறையின் இயக்குனராக இருப்பவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. இவரது பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இவருடைய பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டு உள்ளது. முன்னதாக, இவரது பதவிக் காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், இந்தாண்டு நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் 2வது முறையாக ஓராண்டு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் இயக்குநர் பதவிக் காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகள் வரை நீட்டிப்பதற்கான மசோதாக்களை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் போது, சஞ்சய் மிஸ்ராவுக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அரசு தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டிருந்தது. ஆனால் இது தற்போது மீறப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர்கள் பதவி நீட்டிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் அமர்வில் இருந்து நீதிபதி எஸ்.கே.கவுல் நேற்று விலகினார். அவர் தனது விலகுகளுக்கு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: