போலி வாஷிங் பவுடர் தயாரிப்பதற்காக பதுக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள மூலப் பொருட்கள் பறிமுதல்: போலீசார் விசாரணை

 புழல்:சோழவரம் அருகே, போலி வாஷிங் பவுடர் தயாரிப்பதற்காக பதுக்கிய ரூ.1 கோடி மதிப்பு மூலப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த எடப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிடங்குகளில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரில் போலி வாஷிங் பவுடர் தயாரிக்கப்பட்டு வருவதாக சோழவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் எடப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள 3 தனியார் கிடங்குகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு, பிரபல நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்பட்ட 500 மூட்டை சோப்பு பவுடர், 50 கேன் சோப்பு திரவம், 6 பேக்கிங் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார், போலி தொழிற்சாலையின் மேனேஜர் முகமது இப்ராஹிம், சூபர்வைசர் ரவி மற்றும் ஊழியர்கள் பிரின்ஸ்குமார்,சந்திரபால் ஆகியோரை கைது செய்து, பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக, விசாரணை மேற்கொண்ட போலீசார் நேற்று முன்தினம் தனியார் கிடங்குகளில் இருந்து வாஷிங் பவுடர் தயாரிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: