நெமிலி அருகே ஊராட்சிக்கு சொந்தமான குட்டை ஆக்கிரமிப்பில் விளைந்த நெற்பயிர் அறுவடை செய்யாமல் வீணடிப்பு-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நெமிலி : ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ் வெண்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான நீர் குட்டையை காணவில்லை. கண்டுபிடித்து தர வேண்டுமென தாசில்தாரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முருகவேல் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு கொடுத்தார். அதன்பேரில் நெமிலி தாசில்தார் கீழ் வெண்பாக்கம் பகுதிக்குச் சென்று பார்வையிட்டதுடன், இதுதொடர்பாக பிடிஓவிடம் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து பிடிஓக்கள் வேதமுத்து, சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் நீர் குட்டையை அதே பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை விவசாயம் செய்து அறுவடை முடிந்த உடனே ஊராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். இதுதொடர்பாக கீழ் வெண்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி முருகவேல், ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்ய போதிய இடம் இல்லை, ஆகையால் ஆக்கிரமிப்பு செய்த நீர் குட்டை இடத்தை விவசாயம் செய்து அறுவடை முடிந்த உடனே ஊராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என  ஆகஸ்ட் 19ம் தேதி தெரிவித்தார்.

ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் ஊராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நீர் குட்டை பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை செய்து முடித்து விட்டனர். ஆனால் ஊராட்சிக்கு சொந்தமான நீர் குட்டை பகுதியில் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராகியும் அதனை அறுவடை செய்தால் உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றி குட்டையை எடுத்துக் கொள்வார்கள் என விவசாயம் செய்த நெல் பயிர்களை அறுவடை செய்யாமல் விட்டுள்ளனர். இதனால் நிலத்தில் மீண்டும் நெல்மணிகள் முளைத்து வருகிறது.

இதனால் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டெடுக்க முடியாமல் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மாவட்ட கலெக்டர் இந்த விஷயத்தில் தலையிட்டு ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்களிடமிருந்து குட்டையை மீட்டு உடனடியாக ஊராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: