வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்தை மாணவர்கள் திறந்து வைத்தனர்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனால் அங்குள்ள ஒரு வாடகை கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19.80 லட்சம் ஒதுக்கி, அங்கு புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. எனினும், அப்பள்ளி கட்டிட திறப்பு விழா பல்வேறு காரணங்களால் 2 முறை தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா, துணை தலைவர் சித்ரா, வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா உள்பட பலர் எம்எல்ஏவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பள்ளி கட்டிட திறப்புவிழாவிற்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து, புதிய கட்டிடத்தை அப்பள்ளி மாணவர்களே ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

Related Stories: