சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு அகற்றம்: வேறு இடத்தில் நட்டனர்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது, 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தை வேருடன் பறித்து எடுத்து, வேறு இடத்தில் பொதுமக்கள் நட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு-ஈரோடு பிரதான சாலையில் உள்ள ராஜாகவுண்டம்பாளையம் கிராமம் அருகே, சாலையோரம் முனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரத்தை சுற்றி கல்திட்டுகள் கட்டப்பட்டு இருந்தது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பஸ்சுக்காக காத்திருப்பவர்கள், இந்த திட்டில் அமர்ந்து இருப்பது வழக்கம்.

இந்த நிலையில், பள்ளிபாளையம்-திருச்செங்கோடு சாலையை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தை கையகப்படுத்தி, அங்குள்ள கட்டிடங்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விரிவாக்க பணியில் முனியப்பன் கோயில் அருகேயுள்ள, பழமையான ஆலமரத்தை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், ஊர் மக்கள் ராஜா கவுண்டம்பாளையத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலமரத்தை, தாங்களே பறித்து வேறு இடத்தில் நட்டுக்கொள்வதாக தெரிவித்தனர்.

அதன்படி, நேற்று காலை ஆலமரத்தை சுற்றிலும் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி வெட்டி, மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து சென்று, அருகில் இருந்த ஊர் பொது இடத்தில் ஆலமரம் நடப்பட்டது. இதனால் ராஜாகவுண்டம்பாளையம் ஊர்மக்கள், முனியப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: